வாஷிங்டன், மே 28 - வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர்களுக்கான விசா விண்ணப்பம் தொடர்பான எந்தவொரு நேர்முக சந்திப்புக்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என தூதரக மற்றும் பேராளரகங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டிகள் விரைவில் வெளியிடலாம் என எதிர்பாக்கப்படுகிறது. இதையடுத்து, வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடகங்கள் மீதான சோதனைகளையும் அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதன்மை வருவாய் மூலமாகத் திகழ்வதே வெளிநாட்டு மாணவர்கள் தான். இந்நிலையில் மீண்டும் டிரம்ப் அதிபரானது முதல் அவர்கள் குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு முன் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரூபியோ இரத்துச் செய்தார். அதே சமயம் அமெரிக்கர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கும் டிரம்ப் தடை விதித்தார். அவ்வரிசையில் புதிய நடவடிக்கையாக இது சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


