கோலாலம்பூர், மே 28 - இம்மாதம் 22 முதல் நேற்று வரை கூட்டரசு தலைநகரில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் எந்தவித பாதுகாப்பு அசம்பாவிதங்களும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றன.
அனைத்துத் தரப்பினரின், குறிப்பாக வெளியுறவு அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்பால் அனைத்து நாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கான சுமூகமான பாதுகாப்புக் கட்டுப்பாடு உறுதி செய்யப்பட்டது என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் துணை இயக்குநர் (நடவடிக்கை ) டி.சி.பி. எம்.வி. ஸ்ரீ குமார் கூறினார்.
வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை மாநாடு நடைபெறும் இடத்திற்கு கொண்டுச் சென்று மீண்டும் அழைத்து வரும் பணி திட்டமிட்டபடி நடந்தது. உச்சநிலை மாநாடு முழுவதும் அனைத்து தரப்பினர் மீதும் பாதுகாப்புக் கட்டுப்பாடும் சிறப்பாக இருந்தது என்று இன்று இங்கு பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
மாநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரின் தங்கும் விடுதி மற்றும் மாநாட்டு மையத்தைச் சுற்றியுள்ள சாலைகளை படிப்படியாக மூடும் பணி பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுமூகமாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது பாதுகாப்பு பணிகளுக்காக அரச மலேசிய காவல்துறை கிட்டத்தட்ட 6,200 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை நியமித்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த மே 23 முதல் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஆறு நெடுஞ்சாலைகள் மற்றும் 25 பிரதான சாலைகளை மூடும் பணி படிப்படியாக செயல்படுத்தப்பட்டன.


