கோலாலம்பூர், மே 28 - கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை (JRTB) ஓரங்களில் வனவிலங்குகளாகப் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.
இதனால் வாசம் பிடித்து காட்டு யானைகள் நெடுஞ்சாலைக்கு வந்து விடுகின்றன. இச்செயல் வனவிலங்குகளுக்கும் வாகனமோட்டிகளும் இடையில் மோதலை உருவாக்குவதாக சுங்கை பட்டாணி ``Response Team`` தன்னார்வலர் முகமட் அமிர் ஃபைசால் சுட்டிக் காட்டினார்.
மே 11 முதல் தாங்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில், JRTB நெடுகிலும் பல்வேறு இடங்களில் பழக்குவியல்களைக் கண்டதாக அவர் சொன்னார்.
அப்பகுதி யானைகள், கரடிகள், மலாயா புலிகள், சிறுத்தைகள், தாபீர்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இடமாகும். அதனால், இப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.
எனவே சாலையோரத்தில் உணவை விட்டுச் செல்வது தவறானது மட்டுமல்ல, பொறுப்பற்றது மற்றும் சாலைப் பயனர்களுக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், இது போன்ற பகுதிகளில் வனவிலங்குகளுக்கு உணவுகளை விட்டுச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் தற்போதைக்கு இடமில்லை என வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை கூறியுள்ளது.
காட்டு விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்ற பொது மக்களை எச்சரிக்கும் பலகைகளை வேண்டுமானால் நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கலாம். விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இருக்கும் ஒரே வழி ஆகும்.


