ஷா ஆலம், மே 28 - பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி வரும் ஜூன் மாதம் 17 ஆம்தேதி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த பதவி துறப்புக் கடிதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் இன்று முதல் ஜூன் 16 வரை எஞ்சியுள்ள வருடாந்திர விடுமுறை நாட்களை தாம் கழிக்கவுள்ளதாகவும் அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
எனது இந்த ராஜினாமா வரும் ஜூன் 17 முதல் அமலுக்கு வரும். இன்று முதல் வரும் ஜூன் 16 வரை மீதமுள்ள வருடாந்திர விடுப்பை நான் பயன்படுத்துவேன் என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற கெஅடிலான் கட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறிய அவர், மக்களின் ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் தனக்கு இனி இல்லை என்றார்.
கட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோர் அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கு ஏதுவாக தோற்கும் தலைவர்கள் வழிவிட வேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கைக்கு ஏற்ப எனது இந்த முடிவு அமைந்துள்ளது என்று அவர் விளக்கினார்.
இங்கு நான் இருந்த காலம் முழுவதும் எனக்கு முழு ஆதரவை வழங்கிய பொருளாதார அமைச்சின் தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இங்குள்ள பெரும்பாலான அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் ஆற்றலை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். அவர்கள் மூலம் கொள்கைகளை வகுத்து பயனுள்ள திட்ட கட்டமைப்புகளை அமல்படுத்த முடிந்தது என்று ரபிஸி தெரிவித்தார்.
கெஅடிலான் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிட்ட ரபிஸி, நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வியடைந்தார். நூருல் இஸ்ஸா 9,803 வாக்குகளைப் பெற்ற வேளையில் பாண்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரபிஸி 3,866 வாக்குகளைப் பெற்றார்.


