ஈப்போ, மே 28 - இல்லாத இணைய வணிக முதலீட்டு மோசடியில் சிக்கி ஒரு நிறுவன இயக்குனர் ஒருவர் 14 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 75 வயதுடைய அந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசில்
புகார் அளித்ததாகப் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட நபரை தொலைபேசி வழி தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நிறுவனத்திடமிருந்து பொருட்களை வாங்குவதற்காக நிறுவனத்தில் பங்குதாரராக ஆக விரும்புவதாக கூறியது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
அந்த நிறுவனத்தின் நிலையை சரிபார்த்தபோது அது கடந்த 1989ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதில் பங்குதாரராகப் பாதிக்கப்பட்டவர் ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்கினால் பாதிக்கப்பட்டவர் அதற்கான விலையை மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் அந்த விற்பனையின் வழி 30 விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும் அவரிடம் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் ஒரு நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் ரொக்க வைப்பு இயந்திரம் (சி.டி.எம்.) மூலம் 22,122 வெள்ளியை முன்பணமாக செலுத்தியதாக நூர் ஹிசாம் நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த முதலீடு மூலம் வருமானம் கிடைத்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கடந்த ஏப்ரல் 17 முதல் மே 16 வரை ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் 1,470,734 வெள்ளியை முதலீடாகச் செலுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.
இதற்கு பிறகு பாதிக்கப்பட்டவருக்கு எந்தப் பணமும் திரும்ப கிடைக்காததைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்தார் என நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
மோசடி குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


