கோலாலம்பூர், மே 28 - காஸா மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் போர் குறித்து ஆசியான் உறுப்பு நாடுகள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் நிறைவைத் தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்ட தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஸாவில் நிலவும் மோசமான மனிதாபிமான நிலைமையை சுட்டிககாட்டிய அந்த பிராந்திய கூட்டமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டித்தனர்.
இந்த தாக்குதல்களின் விளைவாக ஏராளமானோர் குறிப்பாக அப்பாவி பெண்கள் மற்றும் சிறார்கள் உயிரிழந்துள்ளனர். அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐ.சி.ஜே.) தற்காலிக உத்தரவுகள் உட்பட பொதுமக்களைப் பாதுகாக்க வகை செய்யும் அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்கும்படி அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் ஆசியான் உறுப்பு நாடுகளின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் அனைத்து ஆசியான் உறுப்பினர்களும் அயலக பங்காளிகளும் அத்தகைய உதவிகளைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்திற்கு அவர்கள் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். மேலும் எல்லைக் கடப்புகள் கடல் வழியாகவும் விரிவாக்கப்பட்டு தடையற்ற, விரைவான, பாதுகாப்பான மற்றும் நீடித்த மனிதாபிமான அணுகலை முழுமையாக மீண்டும் தொடங்குவதன் அவசியத்தை அத்தலைவர்கள் வலியுறுத்தினர்.
அனைத்துலகச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஐ.நா. தீர்மானங்களுக்கு ஏற்ப இரு-அரசு தீர்வின் அடிப்படையில் விரிவான, நீதியான மற்றும் நீடித்த தீர்வை நோக்கி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையைத் தொடர அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஆசியான் வலியுறுத்தியது.
46வது ஆசியான் உச்சநிலை மாநாடு மலேசியாவின் தலைமையின் கீழ் கடந்த மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 'உள்ளடங்கிய மற்றும் நிலைத்தன்மை' என்ற கருப்பொருளில் நடைபெற்றது.


