புத்ராஜெயா, மே 28 - இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த சிறார்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான கூடுதல் நடவடிக்கைகளைத் தகவல் தொடர்பு அமைச்சு விரிவாக ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகளைக் கொண்ட அமைச்சு ஊழியர்களின் மட்டத்தில் இம்முயற்சி தொடங்கப்படும் என்றும், அவர்களுக்கு சமூக ஊடகக் கணக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சரிபார்த்துச் செயலிழக்கச் செய்யும்படி அதன் அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.
சமூக ஊடகத்தில் செல்வாக்குமிக்க நபர் ஒருவர், 14 வயது பதின்ம பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக ஊடக முறைகேட்டில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
"சமூக ஊடகங்களின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ளாத சிறார்கள் பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
அதைத் தவிர, பதிவு செய்யப்பட்ட முறையான பயனர்கள் மட்டும் சமூக ஊடக தளங்களை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அடையாள சரிபார்ப்பு செயல்முறையை உருவாக்குவதன் அவசியத்தையும் அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
பெர்னாமா


