கோலாலம்பூர், மே 28 - விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் 15 லட்சத்து 60
ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 10 ட்ரோன்களை வட கிள்ளான் துறைமுகம்
வாயிலாக நாட்டிற்குள் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை
அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்துள்ளது.
இம்மாதம் 23ஆம் தேதி மாலை 5.15 மணியளவில் அந்த துறைமுகத்தில்
உள்ள 20 அடி நீளம் கொண்ட கொள்கலன் ஒன்று பறிமுதல்
செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கடத்தல் முயற்சி அம்பலத்திற்கு
வந்ததாக சுங்கத் துறையின் அமலாக்கப் பிரிவு உதவித் தலைமை
இயக்குநர் ரிஸாம் செதாபா முஸ்தாபா கூறினார்.
அந்த ட்ரோன்கள் உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக ஆசிய நாட்டிலிருந்து
இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவை சமையலறை டவல்கள் (கிச்சன்
டவல்) என சுங்கத் துறையிடம் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அவர்
தெரிவித்தார்.
ட்ரோன் போன்ற மின்னியல் வர்த்தகப் பொருள்களை நாட்டிற்குள்
கொண்டு வருவதாக இருந்தால் சிரிம் அமைப்பிடமிருந்து சி.ஒ.ஏ.
எனப்படும் ஒப்புதல் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
இதனிடையே, கோலாலம்பூர் சுங்கத் துறை அதே துறைமுகத்தில் கடந்த
7ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் 28 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி
மதிப்புள்ள 21,351 லிட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரிஸாம்
கூறினார்.
இவ்விரு பறிமுதல் சம்பவங்கள் தொடர்பிலும் 1967ஆம் ஆண்டு சுங்கச்
சட்டத்தின் 135(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக
அவர் குறிப்பிட்டார்.
இந்த மதுபானங்கள் யாவும் புத்தகங்கள், ஆடைகள் மற்றும் விளையாட்டுப்
பொருள்கள் என சுங்கத் துறையிடம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன
என்றார் அவர்.


