குவாந்தான், மே 28 - விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க விரைவில்
வரவிருக்கும் பள்ளி விடுமுறையின் போது பிள்ளைகளின் பாதுகாப்பை
உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளையில்
அவர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்குமாறு பகாங் மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பெற்றோர்களுக்கு ஆலோசனை
வழங்கியுள்ளது.
நீர் விளையாட்டுகளில் பங்கேற்கும் பட்சத்தில் தேர்ந்தெடுக்கும் இடம்
மற்றும் வானிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு
ஒருபோதும் அலட்சியப் போக்குடன் இருந்து விடக்கூடாது என்று மாநில
தீயணைப்புத் துறையின் இயக்குநர் முகமது ரஸாம் தாஜா ரஹிம்
கூறினார்.
தற்போது வானிலை நிச்சயமற்றதாக உள்ளது. ஆகவே, பாதுகாப்புக்கு
முன்னுரிமை அளிக்கும்படி பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கின்றனர் என்பதை பெற்றோர்கள்
அறிந்திருக்க வேண்டும் என்பதோடு நீர் நிலைகள் மற்றும் வேகமான
நீரோட்டம் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் செல்லாமலிருப்பதை உறுதி
செய்ய வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2025 தீ பாதுகாப்பு அமைப்பு மீதான
கருத்தரங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வை மாநில அரசு செயலாளர் டத்தோ
நஸ்ரி அபு பாக்கார் தொடக்கி வைத்தார்.
இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் நீரில் மூழ்கியது தொடர்பில் 14
மரணங்களும் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீவிபத்துகளில் மூன்று
மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக அவர் சொன்னார்.


