கோலாலம்பூர், மே 27 - செமினியில் இம்மாதத் தொடக்கத்தில் போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து ஒரு வீட்டில் கொள்ளையிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.15 மணி முதல் மாலை 5.32 மணி வரை டெங்கில், புக்கிட் பூச்சோங், புக்கிட் ராஜா மற்றும் கிள்ளான் ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 33 முதல் 38 வயதுடைய நான்கு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒரு மஞ்சள் நிற பெரோடுவா மைவி கார், மூன்று கைப்பேசிகள் மற்றும் சில உடைகளை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இன்று வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றொருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸ் ஜாமீன் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, இன்னும் தலைமறைவாக இருக்கும் மேலும் ஒரு சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 395 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஹூசேன் கூறினார்.
போலீஸ் போல் சீருடை அணிந்து சோதனை நடத்துவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் கும்பல் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, போலீஸ் அதிகாரிகள் போல் வேடமிட்ட ஐந்து ஆடவர்கள் 55 வயதான பணி ஓய்வு பெற்ற ஒருவரையும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரையும் மடக்கி வீட்டில் கொள்ளையடிப்பதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


