பாங்கி, மே 27- இவ்வாண்டு தீபகற்ப மலேசியாவில் உள்ள 563 கூட்டரசு
சாலைகளைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் 35 கோடி வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளதாக பொதுப்பணித்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அகமது
மஸ்லான் கூறினார்.
அந்த தொகையில் 27.5 கோடி வெள்ளி தொடர்ச்சியான நடைபாதை
பராமரிப்பு பணிகளுக்கும் 7.5 கோடி வெள்ளி நடைபாதை அல்லாத
பராமரிப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த பணிகளுக்கான குத்தகை கிரேட் ஜி1 முதல் ஜி4 வரையிலான
குத்தகையாளர்களுக்கு வாக்களிப்பு முறையில் வழங்கப்படும் என அவர்
தெரிவித்தார்.
மத்திய மற்றும் கிழக்கு மண்டலத்திற்கான குத்தகைப் பணிகளை கிரேட்
ஜி1 முதல் ஜி4 வரையிலான குத்தகையாளர்களைக் கொண்டு விரைந்து
மேற்கொள்ளும் பொருட்டு நடைபெற்ற குத்தகையாளர் தேர்வு வாக்களிப்பு
முறையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
கூறினார்.
தென் மண்டலத்திற்கான குத்தகையாளர் தேர்வு நாளை தொடங்கி இரு
தினங்களுக்கும் வட மண்டலத்திற்கான தேர்வு வரும் ஜூன் 5 மற்றும்
6ஆம் தேதிகளில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வாக்களிப்பு முறை நியாயமான முறையில் நடைபெறும் என்பதோடு
குத்தகையாளர்கள் இணையம் வாயிலாக முடிவுகளை அறிந்து
கொள்ளலாம். கடந்தாண்டு தேர்வு பெற்ற குத்தகையாளர்கள் இவ்வாண்டு
தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர்
சொன்னார்.
அனைத்து குத்தகை பணிகளும் சீராக மேற்கொள்ளப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளும் அனைத்து குத்தகையாளர்களும் அதிகாரிகளின் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் கூறினார்.


