NATIONAL

ஆசியானில் இணையும் தீமோர் லெஸ்தேவின் முயற்சிக்கு இந்தோனேசியா ஆதரவு

27 மே 2025, 1:14 PM
ஆசியானில் இணையும் தீமோர் லெஸ்தேவின் முயற்சிக்கு இந்தோனேசியா ஆதரவு

கோலாலம்பூர், மே 27 - ஆசியானில் முழு உறுப்பினராக ஆகும் தீமோர்-லெஸ்தேவின் முயற்சிக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மீண்டும் தனது ஆதரவைப் புலப்படுத்தியுள்ளார். மேலும், இந்த வட்டார அமைப்பில் சேர்வதில் பப்புவா நியூ கினி கொண்டுள்ள ஆர்வத்தையும் அவர் வரவேற்றுள்ளார்.

நேற்று இங்கு நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஆற்றிய தனது முதல் உரையில் தீமோர்-லெஸ்தே இவ்வாண்டு ஆசியானின் முழு உறுப்பினராகும் என நம்பிக்கை தெரிவித்த அவர், எதிர்காலத்தில் பப்புவா நியூ கினியும் உறுப்பினராகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பதவியேற்ற பிறகு, பிரபோவோ இந்த உச்சநிலை மாநாட்டில் முதன்முறையாகப் பங்கேற்கிறார்.

ஆசியான் தற்போது 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகியவையே அந்த பத்து நாடுகளாகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆசியான் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்த தீமோர்-லெஸ்தே 2022 ஆம் ஆண்டு உயர்மட்டக் கூட்டங்களில் பார்வையாளராக பங்கேற்கும் அந்தஸ்தைப் பெற்றது. தற்போது முழு இணைப்புக்கான பரிசீலனையில் அந்நாடு உள்ளது.

அதே சமயம், பப்புவா நியூ கினியும் ஆசியானில் சேர விரும்புவதாக சமிக்ஞை செய்துள்ளது. தென்கிழக்காசியாவின் பொருளாதார வளர்ச்சியின் வழி பயனடைய தனது நாடு ஆசியானில் சேர திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜேம்ஸ் மராப் கூறியதாக கடந்த மார்ச் 10ஆம் தேதி நாளிதழான தி நேஷனல் செய்தி வெளியிட்டிருந்தது.

உச்சநிலை மாநாட்டின் பிரதான அமர்வின் போது பேசிய சுபியிந்தோ, உருவாகிவரும் சவால்களை சிறப்பான எதிர்கொள்ள அதிக அதிகாரம் பெற்ற மத்திய அமைப்பு மற்றும் பொதுச் செயலாளர் உட்பட வலுவான ஆசியான் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

ஆசியான் சமூகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். மேலும் பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சி மற்றும் சமூக ஒத்துழைப்பில் நமது முன்னேற்றத்தில் பெருமை கொள்கிறோம். ஆனால் இன்னும் திறம்பட செயல்பட நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.