கோலாலம்பூர், மே 27- இங்கு நடைபெறும் 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சி நிலை மாநாடுகள் இன்று இறுதி நாளை எட்டியுள்ள நிலையில் மலேசிய தலைநகரம் அனைத்துலக அரசதந்திரிகள் ஒன்று கூடும் மையமாகத் தொடர்ந்து திகழ்கிறது.
இன்றைய முக்கிய நிகழ்வுகளாக பிராந்திய மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கியமான உயர்மட்டக் கூட்டங்கள் அதாவது, 2வது ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (ஜி.சி.சி.) உச்சநிலை மாநாடு மற்றும் தொடக்க ஆசியான்-ஜி.சி.சி.-சீனா உச்சநிலை மாநாடு ஆகியவை நடைபெறவுள்ளன.
ஆசியான் உறுப்பு நாடுகளுடனான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு, காஸா மற்றும் பாலஸ்தீன பிரச்சனைகளை விரிவாகத் விவாதிப்பதற்கான முயற்சிகள் குறித்து இரண்டாவது உச்சநிலை மாநாட்டில் ஜி.சி.சி. நாடுகள் முக்கிய கவனம் செலுத்தும் என்று ஜி.சி.சி. பொதுச் செயலாளர் ஜாசெம் முகமது அல்புடைவி கூறினார்.
இதற்கிடையில், இந்த மூன்று தரப்புகளுக்கு இடையிலான முத்தரப்பு உச்சநிலை மாநாடு ஆசியான் 2025 தலைவராக இருக்கும் மலேசியாவின் புதிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இது ஆசியான், ஜி.சி.சி மற்றும் சீனா இடையே முத்தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முத்தரப்பு உச்சநிலை மாநாடு பிராந்திய கூட்டமைப்பின் ஒற்றுமையின் வலிமையைக் குறிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இது உலகம் முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது. அதே நேரத்தில் பிராந்தியத்திற்கும் அதன் மக்களுக்கும் மிகவும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும்.
இந்த உச்சநிலை மாநாடு வர்த்தகம், முதலீடு, மேம்பாடு, நிலையான உள்கட்டமைப்பு மற்றும் பிராந்திய டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் புதிய உத்திகளை கோடிட்டுக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான், ஜி.சி.சி மற்றும் சீனாவின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்கள் இப்போது 200 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் கிட்டத்தட்ட 25 டிரில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக மதிப்பு எட்டியுள்ளன.
இதற்கிடையில், வெளிநாட்டு பிரமுகர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் இஸ்தானா நெகாராவில் இன்று அரச மதிய விருந்தை வழங்கவிருக்கிறார்.


