கோலாலம்பூர், மே 27- உயர்தர உள்கட்டமைப்பு மற்றும் வலுவான
பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மாநிலம்
தென்கிழக்காசியாவில் வளர்ச்சிக்கான முன்மாதிரியாக விளங்கி
வருவதோடு பிற மாநிலங்கள் உள்பட இந்த பிராந்தியத்தில் உள்ள இதர
நாடுகளுக்கும் பெருந்திட்டத்தை வழங்குகிறது.
மலேசியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவும் நாட்டின்
பொருளதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கி வரும் மாநிலமாகவும்
விளங்கும் சிலாங்கூர் உயர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பது
உள்ளிட்ட தனது வளர்ச்சி மாதிரியை பகிர்ந்து கொள்வதில் முக்கியப்
பங்காற்ற முடியும் என்று பசிபிக் ஆய்வு மையத்தின் முதன்மை
ஆலோசகர் ஓ எய் சுன் கூறினார்.
பல்வேறு அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ள சிலாங்கூர் உலகின் துரித
வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு
இப்பிராந்தியத்தில் நுழையக்கூடிய உயர்தரத்திலான முதலீடுகளை
ஈர்க்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.
சிலாங்கூர் மற்றும் பினாங்கை நோக்கினால், அவ்விரு மாநிலங்களும்
மிகச் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளன. தென்கிழக்காசியாவில்
சிங்கப்பூருக்கு அடுத்து அதிக வளர்ச்சி கண்ட பிராந்தியமாக நீங்கள்
(சிலாங்கூர்) விளங்கக் கூடும் என அவர் தெரிவித்தார்.
இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற
வரும் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது மீடியா
சிலாங்கூருக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் கூறினார்.
இப்போது எழும் கேள்வி என்னவென்றால், இந்த உதாரணங்களை நீங்கள்
எவ்வாறு இந்த பிராந்தியத்துடன் பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள்? உயர்
தொழில் நுட்ப முதலீடுகள் வரும் போது அதனை எவ்வாறு கையாளப்
போகிறீர்கள்? என்பதாகும் என அவர் சொன்னார்.
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்த
தன் மூலம் ஆசியானின் நுழைவாயிலாக உருவாகும் தொலைநோக்கு
இலக்கை சிலாங்கூர் கடந்த 2015ஆம் ஆண்டு முதலே வரைந்து விட்டது.
இந்த நோக்கம் நிறைவேறுவதில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
முதலீடுகள் மற்றும கொள்கைகள் உறுதுணையாக உள்ளன என்றார் அவர்.


