டுங்குன், மே 27: கடந்த வாரம், இணைய மோசடி கும்பலால் குடும்பத் தலைவி ஒருவர் RM112,206 இழந்ததாக டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைவர் மைசுரா அப்துல் காதிர் தெரிவித்தார்.
27 வயதான அப்பெண் முதலில் சமூக ஊடகத் தளமான முகநூலில் ஒரு கைவினைஞர் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு விளம்பரத்தை மே 19 அன்று பார்த்ததாக அவர் கூறினார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரைத் தொடர்பு கொண்டுள்ளார். முதலீட்டு பணியின் தொடக்கமாக RM100 செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட பின்னர் பதிவு நோக்கங்களுக்காக தனிப்பட்ட தகவல்களை அம்மாது வழங்கியுள்ளார்.
“அதன்பிறகு, பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு பணிக்கும் பெரிய கமிஷன்களை வழங்கும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார்,” என்று மைசுரா அப்துல் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த இல்லத்தரசி தனது சேமிப்பைப் பயன்படுத்தி 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM112,206 பணப் பரிவர்த்தனைகளைச் செய்ததாகவும், நிறுவனத்தின் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறி சந்தேக நபர் பணத்தைத் திரும்ப தர மறுத்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் மைசுரா கூறினார்.
"நேற்று, பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


