புத்ராஜெயா, மே 27- அண்மையில் நடைபெற்ற தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காப்பதில் தோல்வியடைந்த போதிலும் கெஅடிலான் ராக்யாட் கட்சியை வலுப்படுத்துவதில் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி தொடர்ந்து பங்களிப்பை வழங்குவார் என கட்சியின் உதவித் தலைவர் நம்புகிறார்.
கட்சியில் நீடிக்கப்போவதாக ரபிஸி முன்பு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் என்று முன்பு அளித்த வாக்குறுதிபடி அவர் தொடர்ந்து பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன். அவர் ஒரு உறுப்பினராக பங்களிக்க விரும்புகிறார். அதே நேரத்தில் அவர் இன்னும் கெஅடிலான் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஓரிரு நாட்களில் கட்சியின் தலைமைத்துவக் கூட்டம் நடைபெறும். தேர்தலுக்குப் பிறகு பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்க உடனடியாக அதனை நடத்துமாறு தலைவர் (டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) கேட்டுக் கொண்டுள்ளார் என்று அவர் கூறினார்.
கடந்த மே 23ஆம் தேதி நடைபெற்ற 2025-2028 தவணைக்கான கெஅடிலான் கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் நூருல் இஸ்ஸா அன்வார் மொத்தம் 9,803 வாக்குகளைப் பெற்று ரபிஸியைத் தோற்கடித்து கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கெடிலான் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் கட்சியை வலுப்படுத்துவதில் தொடர்ந்து பங்களிப்பேன் என்று ரபிஸி முன்பு கூறியிருந்தார்.
தம்மைப் பொறுத்தவரை பேராளர்களின் தேர்வு எதுவாக இருந்தாலும் 16வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு தமக்கு திறந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


