கோத்தா பாரு, மே 26 - தும்பாட், பலேக்பாங்கில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டதற்கு 30 கிலோகிராம் தங்கத்தை அவர் ஒப்படைக்க மறுத்ததே முக்கிய காரணமாக இருக்கலாம் நம்பப்படுவதாகக் கிளந்தான் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் தெரிவித்தார்.
கும்பல் ஒன்றினால் கடத்தப்படுவதற்கு முன்பு சந்தேகப் பேர்வழிகளின் கோரிக்கைக்கு 44 வயதுடைய அந்த நபர் இணங்க மறுத்துவிட்டார் எனக் கூறிய அவர்,
பணம் பெறும் நோக்கத்திற்காக அவ்வாறு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.
மாநிலம் மற்றும் எல்லைப் பகுதிகள் முழுவதும் சாலைத் தடுப்பு உட்பட ஒரு பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையை காவல்துறையினர் விரைவாக மேற்கொண்டதைத் தொடர்ந்து கடத்தப்பட்டவர் அதே நாளில் விடுவிக்கப்பட்டார் என்றார் அவர்.
பிணைப் பணம் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை. காவல்துறையின் நடவடிக்கையை சந்தேக நபர் அறிந்ததால் பாதிக்கப்பட்டவரை விடுவிக்க முடிவெடுத்திருக்கலாம் என்று இன்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு சந்தேக நபரை தெரியும் என்றும் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு பேரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் முகமட் யூசோப் குறிப்பிட்டார். இந்த வழக்கு பிரிவு 365 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக, அந்த நகை வியாபாரியின் வாகனம் வழிமறிக்கப்பட்டு அவரை சில நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக சாம்பல் நிற சுஸுகி சுவிப்ட் காரில் ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சி வைரலானது.


