குவாந்தான், மே 26 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) அஞ்சல் மற்றும் பொருள் பட்டுவாடா மையத்தில் கடந்த மே 5ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக 14 லட்சம் வெள்ளிக்கும் அதிகம் மதிப்புள்ள 13.74 கிலோ கிராம் கஞ்சா பூக்களை கடத்தும் முயற்சியை அரச மலேசிய சுங்கத் துறையின் பகாங் மாநிலப் பிரிவு வெற்றிகரமாக முறியடித்தது.
பிற்பகல் 3.10 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போதுஅமலாக்கக் குழு பல பொட்டலங்களை சோதனைக்குட்படுத்தி ஸ்கேன் செய்ததில் தாவரம் சார்ந்த பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகப் பகாங் சுங்கத் துறை இயக்குநர் முகமது அஸ்ரி செமான் தெரிவித்தார்.
விரிவான விசாரணையில் கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் தாவரப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்துப் பொருட்களும் வெளிர் நிற பிளாஸ்டிக் பையில் நிரப்பப்பட்டு தலையணை உறை அல்லது சட்டையில் சுற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன என்று அவர் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அண்டை நாடுகளிலிருந்து போதைப்பொருட்களைப் பெற்று மலேசியாவில் பொட்டலமிட்டு பின்னர் கே.எல்.ஐ.ஏ. வழியாகக் கூரியர் நிறுவனங்களைப் பயன்படுத்தி பிற நாடுகளுக்கு அனுப்புவதே சம்பந்தப்பட்ட கும்பலின் கடத்தல் பாணியாகும் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா என்பதைக் கண்டறிய நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களின் முகவரிகள் வேறுபட்டுள்ளன. அந்த பொட்டலங்களில் இரண்டு திரங்கானுவிலிருந்தும் ஒன்று சிலாங்கூரிலிருந்து வந்துள்ளன.
அனைத்து பார்சல்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருந்தன. அது தவிர கஞ்சா பூக்கள் எதற்காக அனுப்பப்பட்டன? அவை பதப்படுத்தப்பட்டதா அல்லது புகைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதா? என்பதையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.
இந்த பறிமுதல் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக முகமது அஸ்ரி கூறினார்.


