வாஷிங்டன், மே 26 - தென்கிழக்காசியாவிலேயே மலேசியர்கள் தான் மளிகைப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் வீட்டு உணவுக்கான பயனீட்டுச் செலவு மலேசியாவில்தான் மிக அதிகமாக இருந்துள்ளது.
அதாவது இரு நபருக்கு ஆண்டுக்கு 1,940 டாலராக அது இருந்ததாக USDA எனப்படும் அமெரிக்க விவசாயத் துறையின் பொருளாதார ஆராய்ச்சி சேவையின் தரவு காட்டுகிறது.
2023-ஆம் ஆண்டில் பேங்க் நெகாரா மலேசியாவின் நாணய மாற்று விகிதத்தின்படி அந்த 1,940 டாலர் என்பது 6,846 ரிங்கிட்டுக்குச் சமமாகும். இருப்பினும், தற்போதைய மாற்று விகிதங்களில் இது 8,286 ரிங்கிட்டுக்குச் சமமாகும்.
மலேசியர்களுக்கு அடுத்து சிங்கப்பூர் 1,531 டாலருடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து, 1,106 டாலருடன் தாய்லாந்து மூன்றாவது இடத்திலும் 1,070 டாலருடன் பிலிப்பைன்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளன. கம்போடியா 896 டாலருடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மலேசியர்கள் வீட்டில் உணவுக்காக அதிக அளவு செலவிடுவதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உணவு இறக்குமதியை நம்பியிருத்தல், ரிங்கிட் நாணய மதிப்பிழப்பு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை இதில் அடங்கும்.


