கோலாலம்பூர், மே 26- உலகளாவிய வர்த்தக முறையின் அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையிலும் ஆசியானின் வலுவான எதிர்கொள்ளும் சக்தி குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆசியான் சமூக உருவாக்கம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காணும் அதன் ஆற்றல் உள்பட அந்த கூட்டமைப்பின் பல்வேறு சாதனைகள் இதற்கு உதாரணமாகும் என அவர் சொன்னார்.
சிக்கலான மற்றும் அச்சமூட்டும் வகையிலான உலகளாவிய மாற்றங்களின் பின்னணியில் ஆசியான் காட்டி வரும் வழக்கத்திற்கு மாறான தாங்கும் சக்தி அந்த அமைப்பின் அடைவு நிலை மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அந்த பத்து நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாண்டு அதுவும் மிகவும் முக்கியமான ஆண்டாக விளங்கும் இத்தருணத்தில் இந்த மாநாட்டை ஏற்று நடத்துவது குறித்து மலேசியா பெருமிதம் கொள்வதாக அன்வார் கூறினார்.
ஆசியான் சமூகம் உருவாக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆன நிலையில் அது பல பிரதிபலிப்புகளையும் மேம்பாடுகளையும் கண்டுள்ளதோடு பிளவுபடாத கடப்பாடு மற்றும் நமது கூட்டுப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் 20 ஆண்டுகால தொலைநோக்கையும் நாம் ஏற்றுக்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.
மலேசியாவின் தலைமையில் கோலாலம்பூரில் நடைபெறும் 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.
புவிசார் அரசியல் ஒழுங்கு முறையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அதே சமயம், அமெரிக்கா அண்மையில் ஒரு சார்பாக வரி விதிப்பை அமல்படுத்தியதன் மூலம் உலகளாவிய வர்த்தக அமைப்பு பதற்றத்தை எதிர்கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பிரிவினையை ஏற்படுத்தும் பன்முகத்தன்மையை நாம் கண்டு வரும் நிலையில் பாதுகாப்பு கொள்கை மறுபடியும் எழுச்சி காண்பதை காண முடிகிறது என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.


