இஸ்தான்புல், மே 26 - காஸாவில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் "அதீத உணவுப் பாதுகாப்பின்மை" மற்றும் பஞ்சத்தின் அபாயத்தில் உள்ளனர் என்று ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் (டபள்யு.எஃப்.பி.) நிர்வாக இயக்குநர் சிண்டி மெக்கெய்ன் நேற்று எச்சரித்தார்,
விரிவான அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை அனைத்துலக சமூகம் முடுக்கிவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக அனடோலு ஏஜென்சி செய்தி கூறியது.
சிபிசி தொலைக்காட்சியில் இடம் பெற்ற 'தேசத்தை எதிர்கொள்ளுதல்' எனும் நிகழ்ச்சியில் பேசிய மெக்கெய்ன், காஸா நிலைமையை ஒரு "பேரழிவு" என்று வர்ணித்தார். மார்ச் மாதத்திற்கும் மே மாத மத்திய பகுதிக்கும் இடையில் வரையறுக்கப்பட்ட உதவிகளை மட்டுமே காஸாவுக்குள் அனுமதித்ததற்காக இஸ்ரேலிய அதிகாரிகளை அவர் கடுமையாகச் சாடினார்.
அவர்கள் ஒரு சில லோரிகளை உள்ளே அனுமதித்துள்ளனர். தேவையுடன் ஒப்பிடும்போது இது ஒரு துளிதான் என்று அவர் கூறினார்.
கடந்த போர் நிறுத்தத்தின் போது ஒரு நாளைக்கு சுமார் 600 லோரிகளை ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் கொண்டு வர முடிந்தது. ஆனால் இப்போது விநியோகம் சுமார் 100 லோரிகளாக குறைந்துவிட்டது. இது "கிட்டத்தட்ட போதுமானதாக இல்லை" என்று மெக்கெய்ன் தெரிவித்தார்.
மேலும் மோசமான பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு நாம் விரைவாகவும் முழுமையாகவும் செயல்பட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
மனிதாபிமான உதவியைத் தொடர இஸ்ரேல் மீது அரசதந்திர ரீதியிலான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என மெக்கெய்ன் வலியுறுத்தினார்.
வெளி அரசதந்திர செல்வாக்கு இல்லாமல் இந்த மக்கள் பட்டினியால் இறப்பதை நாங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று அவர் கூறினார்.
போர் நிறுத்தத்திற்கான அனைத்துலக கோரிக்கையை நிராகரித்து கடந்த 2023 அக்டோபர் முதல் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும்
மிருகத்தனமான தாக்குதல்களில் இதுவரை 53,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.


