கோலாலம்பூர், மே 26- உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நேற்று நடைபெற்ற 2025 ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் (ஏ.கே.எஃப்.) போட்டியில் தேசிய கராத்தே சாம்பியன் சி. ஷாமளா ராணி 50 கிலோ கிராமுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கான குமிட்டே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் குமிட்டே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கான நாட்டின் 13 ஆண்டுகால காத்திருப்புக்கு அவரின் இந்த சாதனை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இருப்பினும், யூனுசோபோட் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் அணியின் போட்டியாளரான குல்ஷன் அலிமர்தனோவாவிடம் 1-7 என்ற கணக்கில் அடைந்த தோல்வி, 26 வயதான தடகள வீரரின் தங்கம் வெல்லும் ஆசையை நிராசையாக்கியது.
இந்தப் பதக்கம் எனக்கு தனித்துவமிக்கது. இது வெறும் வெற்றியை அல்ல - இது ஒரு பெரிய சாதனை. ஏழுமுறை விழு, எட்டாவது முறை வீறுகொண்டெழு என பொதுவாக கூறுவார்கள்.13 ஆண்டுகால பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மலேசியாவை மீண்டும் ஏ.கே.எஃப். இறுதிப் போட்டிக்குக் கொண்டு வர நான் ஏழு முறை போராடினேன் என்று அவர் சொன்னார்.
இந்த வெற்றிக்கு பெரும் தியாகங்கள் தேவைப்பட்டன - ஐந்து முறை வெளியேற்றப்பட்டது எனக்கு பொறுமை, விடாமுயற்சி மற்றும் தொடர்ந்து முயற்சி செய்ய கற்றுக் கொடுத்தன. இறுதியாக நான் இப்போது எதிர்பார்த்த நிலையை அடைந்திருக்கிறேன் என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.
கராத்தே விளையாட்டில் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவதற்காக மேலும் வெற்றிகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த வெற்றி தூண்டியதாக ஷாமளா ராணி கூறினார்.
நான் இத்துடன் நிற்கப் போவதில்லை. வெற்றிக்குப் பின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்க விரும்புகிறேன், ஏனென்றால் இந்த விளையாட்டில் ஒரு அர்த்தமுள்ள மரபை விட்டுச் செல்வதே எனது முக்கிய குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் ஆக கடைசி சாதனையாக கடந்த 2012 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் நடந்த குமிட்டே போட்டியில் ஆண்கள் 55 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் ஆர். லோகனேஷா ராவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதே நேரத்தில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு சீனாவின் குவான் ஷோவில் நடந்த போட்டியில் 84 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் முகமது ஹத்தா மாமுட் தங்கப் பதக்கம் வென்றார்.


