குவாந்தான், மே 26- முகநூலில் கடந்த மாதம் விளம்பரப்படுத்தப்பட்ட இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் கவரப்பட்ட காப்புறுதி முகவர் மேலாளர் ஒருவர் 695,000 வெள்ளியை இழந்தார்.
செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட தகவல்களை அதில் பதிவு செய்யுமாறு 60 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக் கொள்ளப் பட்டதாக பகாங் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் கூறினார்.
தொடக்க முதலீடாக அம்மாது 5,000 வெள்ளியைச் செலுத்தினார். அந்த முதலீட்டின் வாயிலாக அவர் 900 வெள்ளி ஆரம்ப லாபத்தைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் பெற்று பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 695,000 வெள்ளியை 22 பரிவர்த்தனைகள் மூலம் அவர் செலுத்தினார்.
இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை தனது மூலதனம் மற்றும் லாபம் அனைத்தையும் திரும்ப பெற அம்மாது முயன்ற போது அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்று டத்தோ அஸ்ரி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த முதலீடு குறித்து சந்தேகமடைந்த அம்மாது தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் இது குறித்து புகார் அளித்ததாக அவர் சொன்னார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


