NATIONAL

1.1 டன் சயாம் அரிசியைக் கடத்தும்  முயற்சி முறியடிப்பு- வெ.84,400 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

26 மே 2025, 4:46 AM
1.1 டன் சயாம் அரிசியைக் கடத்தும்  முயற்சி முறியடிப்பு- வெ.84,400 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

கோத்தா பாரு, மே 26- பாச்சோக், குனோங் அருகிலுள்ள கம்போங் மாளிகையில் கடல் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 1.1 டன் எடையுள்ள 44 மூட்டை சயாம் அரியை நாட்டிற்குள் கடத்தி வர  மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

நேற்று காலை 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஓப் தாரிங் லண்டாய்/காண்ட்ரா பிராண்ட் நடவடிக்கையில் இந்த அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடல் போலீஸ் துறையின் மூன்றாம் பிராந்திய கட்டளை அதிகாரி ஏசிபி ஜூலாபெண்டி ஹசான் கூறினார்.

கோத்தா பாரு- பாசீர் பூத்தே சாலையில் ஹினோ ரக லோரி ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வதை பெங்காலான் குபோர், மூன்றாம் பிராந்திய நடவடிக்கைப் படையின் உளவுப் பிரிவு உறுப்பினர்கள் கண்டதாக அவர் சொன்னார்.

காவல் துறையின் வருகையை கண்டதும்  அந்த லோரி ஓட்டுநர் வேகத்தை அதிகப்படுத்தி அங்கிருந்த தப்ப முயன்றார். எனினும், கம்போங் மாளிகையில் சாலையோரம் லாரியை நிறுத்திய அதன் ஓட்டுநர் அருகில் உள்ள புதருக்குள் ஓடி மறைந்தார். அவரை தேடிப் பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

அந்த லோரியில் நடத்தப்பட்ட சோதனையில் தலா 25 கிலோ எடையுள்ள 44 மூட்டை சயாம் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த அரிசி அண்டை நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட லோரி உள்ளிட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 84,400 வெள்ளியாகும் என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பில் 1994ஆம் ஆண்டு தேசிய நெல் மற்றும் அரிசி சட்டத்தின் 20 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.