கோலாலம்பூர், மே 26- ஆசியான் அமைப்பின் 46வது உச்சநிலை மாநாடு இன்று தொடங்கி இரு தினங்களுக்கு தலைநகரில் நடைபெறுகிறது. அரசியல் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக கலாச்சாரம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் இந்த பிராந்தியத்தின் மேம்பாடு குறித்து ஆசியான் தலைவர்கள் ஆராயும் தளமாக இந்த மாநாடு விளங்குகிறது.
தென் சீனக் கடல் விவகாரம், மியான்மர் மற்றும் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி, உலக வல்லரசுகளின் தன்னிச்சையான வர்த்தக வரி விதிப்பு, டிஜிட்டல் பொருளாதாரச் சவால்கள், விநியோகச் சங்கிலி உள்ளிட்ட சிக்கல் மிகுந்த அனைத்துலக மற்றும் வட்டார விவகாரங்கள் குறித்து விவாதிக்க கூடிய முதன்மை களமாக .இந்த மாநாடு விளங்குகிறது என்று பிரதமரின் முதன்மை பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருள் அபைடா கூறினார்.
இவ்வாண்டிற்கான ஆசியான் தலைவர் என்ற முறையில் வலுவான, உள்ளடங்கிய மற்றும் ஆக்கத்திறன் கொண்ட ஆசியான் சமூகத்தின் இலக்கை நிர்ணயிப்பதில் மலேசியா முக்கிய பொறுப்பினை ஏற்றுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி வந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஆசியான் அமைப்பு நடப்பு நிலவரங்களுடன் தொடர்புடைய, மக்கள் நலன் சார்ந்த மற்றும் விரைவில் தொடங்கவுள்ள 2045 ஆசியான் தொலை நோக்கிற்கு ஏற்ப அந்த அமைப்பு செயல்படுவதை உறுதி செய்யும் கடப்பாடு மலேசியாவுக்கு உள்ளது என அவர் குறிப்பிட்டார். 46 வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு விளக்கமளிப்பில் அவர் இவ்வாறு சொன்னார்.
இந்த விளக்கமளிப்பு நிகழ்வு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த உச்சநிலை மாநாட்டின் உபரசணை நாடு என்ற முறையில் மலேசியா நாளை நடைபெற இருக்கும் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் (ஜி.சி.சி.) உச்சநிலை மாநாடு மற்றும் ஆசியான்-சீனா-ஜி.சி.சி. உச்சநிலை மாநாடு புதிய முன்னெடுப்பு ஆகியவற்றுக்கு தலைமையேற்கும் என்றும் துங்கு நஷ்ருள் கூறினார்.


