ஷா ஆலம், மே 26- ஷா ஆலம் மாநகரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ஷா ஆலம் மாநகர் மன்றம் தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு இலவச ஆதரவு மருத்துவ உபகரணங்களை வழங்குகிறது.
உள்ளூர் சமூகத்தின் சுபிட்சத்தை வலுப்படுத்தும் முயற்சியாக குறைந்த வருமானம் கொண்ட பி40 தரப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்டு இந்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.
கழிப்பறை இருக்கைகள், நடைபயிற்சி ஊன்றுகோல்கள், செயற்கைப் பற்கள் மற்றும் வாசிப்புக் கண்ணாடிகள் போன்ற துணை உபகரணங்களுக்கான விண்ணப்பங்கள் மே 5 முதல் திறக்கப்பட்டுள்ளதாக மாநகர் மன்றம் குறிப்பிட்டது.
ஷா ஆலம் மாநகரின் 25வது ஆண்டு நிறைவையொட்டி குறிப்பாக ஷா ஆலம் மக்களுக்கு நற்செய்தி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் மற்றும் நல்வாழ்வு தரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மாநகர் மன்றம் முகநூல் பதிவில் தெரிவித்தது.
அறிவிப்பு சுவரொட்டியில் உள்ள கியுஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது 03-5522 2732 அல்லது 010-353 3129 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைச் செய்யலாம்.


