இஸ்தான்புல், மே 24- பிரான்ஸ் முதல் முறையாக NB.1.8.1 எனப்படும் புதிய கோவிட்-19 திரிபுவை உள்ளடக்கிய நான்கு சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
லியோனில் உள்ள தேசிய வழிகாட்டி மையத்தால் இந்த புதிய திரிபு தொடர்பான நான்கு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன என்று உள்ளூர் தொலைக்காட்சி கூறியது.
பல நாடுகள் இந்த திரிபுவின் பரவல் குறித்து புகாரளித்துள்ளன. பிரான்சில் உள்ள மருத்துவமனைகளிலும் சமூகத்திலும் நான்கு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று நச்சுயிரியல் நிபுணர் புருனோ லினா கூறினார்.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் NB.1.8.1 தொடர்பான பல திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.
இந்த NB.1.8.1 திரிபு தற்போது சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு ஆசியாவின் பல பகுதிகளிலும் பரவி வருகிறது. இதனால் ஹாங்காங் மற்றும் தைவானில் தொற்று பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது நோயின் தாக்கம் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என கருதப்பட்டாலும் நெரிசலான பகுதிகளில் முகக்கவசங்களை அணியவும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை அதிகரிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.


