புத்ராஜெயா, மே 24- உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கிள்ளான், சுங்கை பூலோவில் உள்ள சிறு தொழில் பேட்டைப் பகுதியில் மேற்கொண்ட ஓப் காசாக் சோதனை நடவடிக்கையில் கட்டுப்படுத்தப்பட்ட மானிய விலை திரவமய எரிவாயுவை (எல்.பி.ஜி.) முறைகேடாக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வளாகம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொண்டது.
கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கைக்குப்
பின்னர் கடந்த புதன்கிழமை (மே 21) அந்த வளாகம் மீது சோதனை
நடத்தப்பட்டதாக அமைச்சின் அமலாக்கத் துறையின் தலைமை இயக்குநர்
டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.
அந்த வளாகம் எல்.பி.ஜி. எரிவாயுவின் மொத்த விற்பனை மற்றும்
விநியோகத்திற்கான முறையான அனுமதியைப் பெற்றுள்ளது தொடக்கக்
கட்ட சோதனையில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், அலுவலக நேரத்திற்குப் பிறகு மானிய விலையிலான 14 கிலோ
எரிவாயு சிலிண்டர்களில் இருந்து எரிவாயுவை தொழிற்துறைக்கான 50
கிலோ எரிவாயு சிலிண்டரில் நிரப்பும் நடவடிக்கையில் அது ஈடுபட்டு
வந்துள்ளது. இந்நோக்கத்திற்காக சிறப்பு ரப்பர் குழாய் இணைப்புகளும்
ஏற்படுத்தப்பட்டிருந்தன என்று அவர் சொன்னார்.
இந்சோதனையின் போது சுமார் 300,000 வெள்ளி மதிப்புள்ள 1,530 எரிவாயு
சிலிண்டர்கள், இணைப்புக் குழாய்கள், எடை நிறுக்கும் மேடை, மூன்று
லோரிகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பறிமுதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு
உள்நாட்டவர் உள்பட 25 மற்றும் 47 வயதுக்குட்பட்ட மூவர் கைது
செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
குற்றச் செயல் புரியும் நோக்கில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளை
வைத்திருந்ததற்காக 1961ஆம் ஆண்டு விநியோகச் சட்டத்தின் 21வது
பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது


