பாலிக் புலாவ், மே 24- இங்குள்ள கம்போங் கெந்திங், ஜாலான் கம்போங் கெந்திங்கில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகளும் ஒரு காடைக் குருவிக் கூடும் எரிந்து சாம்பலாகின.
இந்த சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு இரவு 9.56 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக
பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்ததீயணைப்புத் துறையினர் தீ கொழுந்துவிட்டு எரிவதையும் இந்த தீ விபத்தில் 2,400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடும் அருகிலிருந்த 800 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு வீடும் பாதிக்கப் பட்டதைக் கண்டனர்.
மேலும் 5,250 சதுர அடி கொண்ட காடைக் குருவிக் கூடு மற்றும் ஒரு டன் லோரியும் இந்த சம்பவத்தில் அழிந்தன. எனினும் யாருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தக் காடைக் கூண்டில் சுமார் 2,000 பறவைகள் இருந்ததாகவும் எனினும் இதுவரை இறந்த அல்லது உயிருடன் உள்ள காடைகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்த தீயணைப்பு குழுவினருக்கு கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. நள்ளிரவு 12.34 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது,
என்று ஜோன் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.


