கோல திரங்கானு, மே 24- பிராணிகளைப் பயன்படுத்தி பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இந்தோனேசிய பிரஜை உட்பட 11 பேரை 'ஓப் டாடு' நடவடிக்கையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் கம்போங் அத்தாஸ் டோலில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த
32 முதல் 56 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக மாநில
காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் தெரிவித்தார்.
இந்த சோதனையில் நான்கு சேவல்கள், ஒரு சேவல் சண்டைப் பத்திரம், 5,823 வெள்ளி ரொக்கம் மற்றும் ஊசிகள், நூல் மற்றும் சிவப்பு மருத்துவ பேண்டேஜ் அடங்கிய ஒரு பையை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில்
திரங்கானு மாநில போலீஸ் தலைமையக குற்றப் புலனாய்வுத் துறையின் டி 7 பிரிவு மாநில கால்நடை சேவைத் துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
சந்தேக நபர்கள் யாரும் போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என்பது
சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு 1953 ஆம் ஆண்டு பொதுவெளி சூதாட்ட விடுதி சட்டத்தின் பிரிவு 7 (2) மற்றும் 2015 ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் பிரிவு 32 (1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


