குவா மூசாங், மே 24- கடந்த செவ்வாய்க்கிழமை கோல பெத்திஸ், சுங்கை சுமார் நதியைக் கடக்கும் போது நான்கு சக்கர இயக்க வாகனம் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அதன் ஓட்டுநர் நேற்றிரவு நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின்போது சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தில் சிக்கிய நிலையில் 51 வயதான சான் சோங் செங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
அவரது வாகனம் நேற்று சம்பவ இடத்திலிருந்து சுமார் 120 மீட்டர் தொலைவில் மிதந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
நேற்று காலை 9.15 மணிக்கு தேடி மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. பாதிக்கப்பட்டவரை காலை 10.20 மணிக்கு மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப் படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 8.30 மணிக்கு நடந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர் ஓட்டி வந்த நான்கு சக்கர இயக்க வாகனம் இங்குள்ள கோலா பெத்திஸில் உள்ள சுமர் நதியைக் கடக்க முயன்றபோது வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது.


