ஜோகூர் பாரு, மே 23: சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) உதவித் தலைவராக தனது பதவியை 7,955 வாக்குகளுடன் தக்க வைத்துக் கொண்டார்.
இந்த முடிவை மத்திய தேர்தல் குழுவின் (ஜே. பி. பி) தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாலிஹா முஸ்தபா இன்று இரவு பெர்சாடா ஜோகூர் சர்வதேச மாநாட்டு மையத்தில் அறிவித்தார்.
2025-2028 காலத்திற்கு கட்சியின் உதவித் தலைவருக்கான தேர்தலில் 5,895 வாக்குகளைப் பெற்ற தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணை அமைச்சர் ஆர். ரமணன் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய முகம்.
இதற்கிடையில், அந்த பதவியில் ஏற்கனவே இருந்தவர்களான நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுதீன் ஹாருன் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் சாங் லி காங் ஆகியோர் முறையே 5,881 மற்றும் 5,757 வாக்குகளைப் பெற்று தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொண்டனர்
கெஅடிலான் கட்சியின் தேசிய தலைவராக டத்தோ ஸ்ரீ அன்வார் போட்டியின்றி தேர்வான நிலையில், இதர பதவிகளை தேர்தல் வழி வென்றவர்கள் கீழ் வருமாறு.
துணைத் தலைவர் பதவிக்கு, நூருல் இஸ்ஸா அன்வர் இந்த சுற்று போட்டியில் தற்போதைய டத்தோ ஸ்ரீ ரஃபிசி ராம்லியை தோற்கடித்தார்.

இன்று நடைபெற்ற 2025/2028 காலத்திற்கான கட்சி தேர்தலில் மகளிர் பிரிவு மற்றும் ஏ. எம். கே மற்றும் உச்சமன்ற பதவிகளுக்கு 251 வேட்பாளர்கள் பதவிகளுக்கு போட்டியிட்டனர். கட்சியின் உச்ச மன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்று வென்ற 20 வேட்பாளர்களில் தகவல் துறை அமைச்சர் பாஹ்மி பட்சில் உட்பட, அடாம் அட்லி, சான் மிங் காய், குணராஜ் ஜோர்ஜ், அஸ்லான் ஹல்மி, டாக்டர் மஸ்லி மாலிக், கோ சுன் ஏக், நுரின் ஐனா, எலிசபெத் ஹேங், சூல்கிப்லி,சித்தி ஐசா, அல்டிமெட், அக்மால் நசீர், அமிடி, லீ சியான் செங், அசாம் காராப், சைட் இப்ராஹிம், குமரேசன், சிம் ச்சுன் சாங். மற்றும் சிவமலர் ஆகியோர்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தல் இரண்டு முறைகள் மூலம் நடத்தப்பட்டது. . கட்சியின் உச்சமன்ற பதவிகளுக்கும் ஏ. எம். கே என்னும் இளைஞர் மற்றும் மத்திய மகளிர் தலைமைத்துவத்திற்கான தேர்தல்கள் முறையே பெர்ஜெயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டல் மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள டாங்கா பே மாநாட்டு மையத்தில் நடத்தப்பட்டது.
சபா மற்றும் சரவாக்கைப் பொறுத்தவரை, சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் (ஐ. டி. சி. சி) பெனம்பாங் மற்றும் கூச்சிங்கில் உள்ள பென் வியூ மாநாட்டு மையத்தில் வாக்களிப்பு நடத்தப்பட்டது.


