கெய்ரோ, மே 23 - கடுமையான பஞ்சத்தில் மக்கள் வாடுவதாக
அனைத்துலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்
இஸ்ரேலின் மூன்று மாத காலத் தடைக்குப் பின்னர் முதன் முறையாக
மனிதாபிமான உதவிப் பொருள்கள் காஸா சென்றடைந்தன.
கோதுமை மாவு, உணவு மற்றும் மருந்துப் பொருள்களை ஏற்றிய 87
லோரிகள் நேற்றிரவு காஸா தீபகற்பத்தை சென்றடைந்ததாக காஸா
தனியார் சரக்கு விநியோகச் சங்கத்தின் உதவித் தலைவர் ஜிஹாட்
இஸ்லிம் கூறினார்.
உதவிப் பொருள்கள் ஏற்றிய சுமார் 90 லோரிகள் காஸா வந்தடைந்ததை
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார்.
நேற்று அதிகாலை முதல் கிடைக்கப்பெற்ற கோதுமையை கொண்டு
ரொட்டி தயாரிக்கும் பணியில் ரொட்டி வணிகர்கள் ஈடுபட்டுள்ள
வேளையில் அவை பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக
அங்கிருந்த பொது மக்கள் கூறினர்.
எனினும், மிகவும் குறைவான அளவு உதவிப் பொருள்கள் காஸா
வந்தடைந்துள்ளதாகவும் உதவிப் பொருள்களுக்கான தேவை மிக
அதிகமாக உள்ளதாகவும் உள்ளுர் மற்றும் அனைத்துலக உதவிப்
பணியாளர்கள் தெரிவித்தனர்.
காஸாவிலுள்ள சுமார் இருபது லட்சம் பாலஸ்தீனர்களின் தேவையை ஈடு
செய்ய தினசரி 500 டிரக் உதவிப் பொருள்கள் தேவைப்படுவதாக ஐ.நா.
முன்னதாக கூறியிருந்தது.
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக உதவி தேவைப்படும் வட
காஸாவுக்கு இன்னும் உதவிப் பொருள்கள் சென்றடையவில்லை என்று
காஸாவிலுள்ள பாலஸ்தீன அரசு சாரா அமைப்புகளின் ஒருங்கமைப்பின்
இயக்குநர் அம்ஜாட் ஷாவா தெரிவித்தார்.
இங்கு நிலவும் அத்தியாவசிய பொருள்களுக்கான தேவையுடன்
ஒப்பிடுவையில் இதுவரை வந்துள்ள லோரிகளின் எண்ணிக்கை மிகவும்
குறைவானதே என்று அவர் சொன்னார்.


