குய்சோ, மே 23 - நேற்று தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தின் இரு வெவ்வேறு நகரங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் இடுபாடுகளில் சிக்கியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டு நேரப்படி டவாங் கவுந்தியில் (Dafang County) உள்ள சாங்சீ நகரில் அதிகாலை மூன்று மணிக்கும், குவாவாவில் காலை ஒன்பது மணிக்கும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
சாங்சீ நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட இருவர் மீட்கப்பட்ட வேளையில், பின்னர் அவர்கள் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
குவாவாவில் உள்ள கிங்யாங் கிராமத்தைச் சேர்ந்த எட்டு வீடுகளில் உள்ள 19 பேர் மண்ணில் புதையுண்டிருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள், அவசரகால மீட்புப் பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோப்ப நாய்கள், உயிர் கண்டறியும் கருவிகள், ஆளில்லா விமானங்கள், சம்பவத்திற்குத் தொடர்புடைய கருவிகள் மற்றும் பிற சாதனங்களையும் பயன்படுத்தி அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பெர்னாமா


