புத்ரஜெயா, மே 23 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே எ.ஐ.ஏ.) முதலாவது முனையத்தில் சுமார் 460,000 வெள்ளி மதிப்புள்ள 300க்கும் மேற்பட்ட அரிய வகை வன விலங்குகளை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் இரு உள்ளூர் ஆடவர்கள் கடந்த புதன்கிழமை (மே 21) கைது செய்யப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) தெரிவித்தது.
அதிகாலை 6.30 மணியளவில் அதிகாரிகள் அவ்விருவரின் பயணப் பெட்டியை ஆய்வு செய்தபோது அதில் அனைத்து விலங்குகளும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அது கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில் நீல உடும்புகள் சிவப்பு காதுகள் கொண்ட ஆமைகள், சவன்னா மானிட்டர்கள், நைல் மானிட்டர்கள் ஆகியவையும் அடங்கும்.
வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான ஆவணங்கள், அனுமதி அல்லது அங்கீகாரக் கடிதங்களை சந்தேக நபர்கள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் 2010ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2008ஆம் ஆண்டு
அழிந்து வரும் உயிரின அனைத்துலக வர்த்தகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வனவிலங்குகளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஏ.கே.பி.எஸ். இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வனவிலங்கு கடத்தலை எதிர்த்துப் போராடவும் மலேசியாவின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் ஏ.கே.பி.எஸ். வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹிலித்தான்) மற்றும் விமானப் பாதுகாப்புக் குழு (ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று அது வலியுறுத்தியது.


