சன்தியேகோ, மே 23 - அமெரிக்கா, கலிஃபோர்னியா, சன்தியேகோவில் சிறுரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும், எண்மர் காயமடைந்திருப்பதாக அப்பகுதியின் அதிகாரத் தரப்பு தெரிவித்தது.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை மணி நான்கு அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை அடுத்து, அமலாக்கத் தரப்பினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
அப்பகுதியிலிருந்த வீடொன்றிலும் சில வாகனங்களிலும் தீ ஏற்பட்டது கண்டறியப்பட்டதாகவும், சன்தியேகோ தீயணைப்பு துணைத் தலைவர் டான் எடி கூறினார்.
இந்நிலையில், அப்பகுதியில் இருந்த வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர். அக்குடியிருப்புப் பகுதியில் சுமார் 2,300 இராணுவ குடும்பங்கள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான நிர்வாகத்தினர் விசாரணையை மேற்கொள்வர் என்று டான் எடி தெரிவித்தார்.
பெர்னாமா


