பெட்டாலிங் ஜெயா, மே 23 - குடிநழைவுத் துறையின் சோதனையின் போது உள்நாட்டவர் எனக் கூறி கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முயன்ற சட்டவிரோத குடியேறி ஒருவர், தேசிய கீதமான நெகாராகூவைப் பாடத் தெரியாமல் விழித்ததால் அதிகாரிகளிடம் வசமாகச் சிக்கினார்.
இந்த ருசிகரச் சம்பவம் இங்குள்ள பண்டார் சன்வேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத் துறை நேற்று நடத்திய சோதனையின் போது நிகழ்ந்தது.
இரவு 9.00 மணிக்கு தொடங்கிய இச்சோதனையில் 1,597 வெளிநாட்டினரிடம் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக 597 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக
குடிநுழைவுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடுகள்) ஜெப்ரி எம்போக் தாஹா கூறினார்.
இந்த பெரிய அளவிலான இந்த சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத் துறையின் 139 உறுப்பினர்கள் ஈடுபட்டனர். மேலும், பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 200 உறுப்பினர்கள், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தைச் சேர்ந்த 40 பேர், தேசிய பதிவுத் துறையைச் சேர்ந்த ஆறு பேர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேரும் இந்த சோதனை நடவடிக்கையில் உதவினர் என அவர் சொன்னார்.
தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் 11 முதல் 59 வயதுக்குட்பட்ட
472 ஆண்கள் மற்றும் 125 பெண்கள் என்று அவர் நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களாக சேகரிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அந்தப் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டினர் குறித்து பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர்வாசிகள் போல் நடிப்பது தவிர்த்து, சோதனையிலிருந்து தப்புவதற்காக சில வெளிநாட்டினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஐந்தாவது மாடியிலிருந்து குதிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களின் முயற்சி பணியில் இருந்த அதிகாரிகளால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது. அடையாள ஆவணங்கள் இல்லாதது, அதிக நாட்கள் தங்கியிருப்பது, அங்கீகரிக்கப்படாத அட்டைகளை வைத்திருப்பது மற்றும் குடிநுழைவுச் சட்டம் 1959/63ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டம் 1966 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் விதி மீறல்கள் கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும் என்று ஜெப்ரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக செமினியில் உள்ள குடிநுழைவு தடுப்புக் காவல் முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.


