கோத்தா பாரு, மே 23 - பாச்சோக், பெரிஸ் குபோர் பெசாரில் உள்ள ஸ்பா எனப்படும் மருத்துவ நீரூற்றுக் குளியல் மையத்தின் உரிமையாளர் மீது எரிதிராவகம் என நம்பப்படும் திரவம் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த சந்தேக நபர் நேற்று மாலை 4.00 மணியளவில் கோல கிராய் நகரில் உள்ள ஒரு ரப்பர் தொழிற்சாலையில் கைது செய்யப்பட்டதாக பாச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு உதவுவதற்காக 45 வயதான சந்தேக நபரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதிக்கு காவல்துறையினர் இன்று விண்ணப்பிப்பார்கள் என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் சந்தேக நபரும் அதே தொழிற்சாலையில் நேற்று கைது செய்யப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தபுதன்கிழமை மாலை 4.00 மணியளவில் 38 வயதுடைய அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை, பாச்சோக் அருகே, தாவாங்கில் உள்ள பெரிஸ் குபோர் பெசாரிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடி அருகே அடையாளம் தெரியாத ஒரு நபரால் அந்த பெண் வர்த்தகர் எரிதிராவக தாக்குதலுக்கு உள்ளானார்.
தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்டவரின் தோள், முதுகு, கைகள் மற்றும் கால்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
குபாங் கிரியான் மருத்துவமறையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பெண்மணியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


