கோலாலம்பூர், மே 23 - எதிர்வரும் மே 26 முதல் 28 வரை நமது நாட்டில் நடைபெறும், 46 வது ஆசியான் மாநாட்டை முன்னிட்டு பொது மற்றும் தனியார் உயர்கல்வி கூடங்களில் கற்றல் கற்பித்தலை இணையம் மூலம் அல்லது நேரடியாக நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அமலாக்கம், மாநாட்டின் போது, உயர்க்கல்விக்கூட நிர்வாகத்தினர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை எளிதாக திட்டமிடுவதற்கும் கற்றல் கற்பித்தல் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் துணைப்புரியும்.
மேலும், மாநாட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை மூடல்களைக் கருத்தில் கொண்டு கற்றல் கற்பித்தலை முழு இணைய வகுப்புகளாக மாற்றுவது பற்றிய முடிவினை உயர்க்கல்வி அமைச்சு விரைவில் அறிவிக்கவுள்ளது.
கூடுதல் தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட உயர்கல்வி கூடங்களின் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


