ஜெனீவா, மே 23 - எல்லையைத் தாண்டி வரக்கூடிய மனிதாபிமான உதவிகள் எதுவும் காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு இவ்வாரம் கிடைக்கவில்லை என்று பாலஸ்தீன செம்பிறைச் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.
வரையறுக்கப்பட்ட உதவிப் பொருள் விநியோகம் மக்களிடைய குழப்பத்தையும் வன்முறையையும் தூண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
யாரும் (உதவி) பெறவில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். இதுவரை எந்த குடிமகனும் எதையும் பெறவில்லை என்று நேற்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது யூனிஸ் அல் காதீப் செய்தியாளர்களிடம் கூறினார்.
உதவிப் பொருள் ஏற்றிய லோரிகளில் பெரும்பாலானவை இன்னும் எல்லையில் உள்ள கெரெம் ஷாலோமில் காத்திருக்கின்றன மற்றும் சோதனை செய்யப்படுகின்றன. ஆனால் காஸாவிற்குள் இல்லை என்று அவர் கூறியதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
களத்தில் நிலைமையை பேரழிவு தரும் சூழல் என வர்ணித்த அல் காதீப், பிரதேசத்திற்குள் நுழையும் குறைவான உதவி, நிலைமையை நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது என்றார்.
அதனை கொலைக்கான அழைப்பு என்று நான் நினைக்கிறேன். மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்கனவே உயிர்களைப் பலிகொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
காஸாவில் 90 விழுக்காட்டு சிறார்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாகக் குறிப்பிடும் அறிக்கைகளை அவர் மேற்கோள் காட்டினார்.
சிறார்கள் பட்டினியால் இறப்பது பற்றிய செய்திகளை இன்று கேள்விப்படுகிறோம். அவசரம் மற்றும் நடக்கவிருக்கும் கொள்ளையை மறைப்பது மிகவும் கடினம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஜெனீவாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய பாலஸ்தீன சுகாதார அமைச்சர் மஜீட் அபு ரமலான், பட்டினி தொடர்பான காரணங்களால் அண்மைய நாட்களில் சிறார்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 29 பேர் இறந்துள்ளதாகக் கூறினார்.


