பேங்காக், மே 23- இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 10,000 மின்சார வாகன (இ.வி.) சார்ஜிங் நிலையங்களை அமைக்க மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.
மலேசியா மின்சார வாகன உற்பத்தி மற்றும் புத்தாக்கத்திற்கான பிராந்திய மையமாக மாறும் நோக்கத்தைக் கொண்டுள்ள அதே வேளையில் முழு மின்சார வாகன மதிப்புச் சங்கிலியையும் வலுப்படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருவதாக எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான அவர்
கூறினார்.
மின்சார வாகன விற்பனையைத் அதிகரிப்பதற்கும் துரிதமாக வளர்ந்து வரும் இந்தத் துறையில் சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் சபா மற்றும் சரவாக் உட்பட மலேசியா முழுவதும் சுமார் 10,000 சார்ஜிங் நிலையங்களை அமைப்பதே எங்கள் இலக்கு என்று நேற்று தாய்லாந்தில் மலேசிய புலம்பெயர்ந்தோருடனான இரவு விருந்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
உயர்தர முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உள்ளூர் தொழில்துறை திறன்களை வலுப்படுத்துவதன் மூலம் மலேசியாவை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தேசிய முதலீட்டு விருப்பத்தையும் ஃபாடில்லா கோடிகாட்டினார்.
மின்சார வாகனத் துறையில் மலேசியாவுக்கு பெரும் ஆற்றல் இருப்பதாக நான் நம்புகிறேன். மின்சார வாகன விற்பனை அதிகரிக்கும் போது இந்தத் துறையில் முதலீடு செய்ய அதிக முதலீட்டாளர்கள் விரும்புவார்கள் என்று அவர் கூறினார்.
இருப்பினும், இதில் சவால்கள் உள்ளதையும் குறிப்பிட்ட அவர், குறிப்பாக மாற்று மின்னோட்ட (ஏசி) சார்ஜர்களுடன் ஒப்பிடும்போது நேரடி மின்னோட்ட (டிசி) சார்ஜர்களுக்கான அதிக தேவை இருப்பதை ஒப்புக்கொண்டார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெட்ரோனாஸ் மற்றும் பிற தொழில்துறை தரப்பினருடன் நாங்கள் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம். நெடுஞ்சாலைகள், கிராமப்புறங்கள் மற்றும் மலேசியா முழுவதும் போதுமான சார்ஜிங் இணைப்பு உள்ளதை எங்கள் அமைச்சு உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
முன்னதாக நேற்று மாலை பேங்காக்கின் பேங் ராக் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஃபாடில்லா நடத்திய இரவு விருந்தில் தொழில்முனைவோர், வணிக துறையினர் மற்றும் மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொண்டனர்.


