கோலாலம்பூர், மே 23 - கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும்
46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு ஆசியானுக்கான
நிரந்தரப் பிரதிநிதிகள் செயல்குழு (சி.பி.ஆர்.) கூட்டம் இன்று
நடைபெறுகிறது.
உயர் மட்ட நிலையிலான இந்த மாநாட்டில் ஆசியான் நிரந்தரப்
பேராளர்கள், தீமோர் லெஸ்தேவுக்கான அரச தந்திரி, ஆசியான் அரசியல்
பாதுகாப்பு சமூகத்தின் துணைத் தலைமைச் செயலாளர் ஆகியோர் கலந்து
கொள்வர்.
இதனைத் தொடர்ந்து ஆசியான் உயர் அதிகாரிகள் தயார் நிலை கூட்டம்
(பிரெப்-எஸ்ஒஎம்) ஆசியான்- வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (ஜி.சி.சி.)
தயார் நிலைக் கூட்டம் மற்றும் ஆசியான்-ஜி.சி.சி.-சீனா தயார் நிலைக்
கூட்டம் ஆகியவை நடைபெறும்.
இந்த உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு புக்கிட் டாமன்சாரா, எஸ்டேட்
பெடரல் ஹில்லில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான்
முகமது ஜின் இன்றிரவு வழங்கும் இரவு விருந்தில் ஆசியான் உயர் மட்ட
அதிகாரிகள் கலந்து கொள்வர்.
இவ்வாண்டு ஆசியான் உச்சநிலை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த
ஒன்றாக விளங்குகிறது. இரண்டாவது ஆசியான்- ஜி.சி.சி. உச்சநிலை
மாநாடு மற்றும் முதலாவது ஆசியான்-ஜி.சி.சி.-சீனா உச்சநிலை மாநாடு
ஆகியவை இம்மாநாட்டை தனித்துவமிக்கதாக ஆக்கியுள்ளதோடு ஆசியான்
பங்காளித்துவம் இந்த பிராந்தியத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை
பிரதிபலிக்கும் வகையிலும் உள்ளது.
ஜி.சி.சி. எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தில் சவூதி அரேபியா,
ஐக்கிய அரபு சிற்றரசு, கட்டார், குவைத், பாஹ்ரின், ஓமான் ஆகிய நாடுகள்
இடம் பெற்றுள்ளன.
‘உள்ளடங்கிய மற்றும் நிலைத்தன்மை‘ எனும் கருப்பொருளைக் கொண்ட
இந்த ஆசியான் மாநாட்டை மலேசியா கடந்த 1977, 1997, 2005, மற்றும்
2015ஆம் ஆண்டுகளில் ஏற்று நடத்தியுள்ளது.


