ஜோகூர் பாரு, மே 23 - எதிர்வரும் 2025/2028 தவணைக்கு புதிய தலைவர்களைத்
தேர்தெடுக்கும் தேர்தலை மையமாகக் கொண்டு கெஅடிலான் கட்சியின்
2024/2025ஆம் ஆண்டு பொதுப் பேரவை இன்று காலை தொடங்கியது.
கட்சியின் தலைமைத்துவ மன்றம் (எம்.பி.பி.) இளைஞர் பிரிவு மற்றும்
மகளிர் பிரிவுக்கான தேர்தல் இன்று காலை 8.00 தொடங்கி மாலை 5.00
மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 32,030
பேராளர்கள் நேரடியாகவும் இயங்கலை வாயிலாகவும் வாக்களிப்பில்
கலந்து கொள்ளவுள்ளனர்.
மத்திய தலைமைத்துவ மன்றம், இளைஞர் மற்றும் மகளிர்ப் பிரிவு
பேராளர்கள் பெர்ஜெயா வாட்டர்பிராண்ட் ஹோட்டல் மற்றும் டங்கா போய்
மாநாட்டு மையத்தில் நடைபெறும் நேரடி வாக்களிப்பில் கலந்து கொள்வர்.
சபா மற்றும் சரவா மாநிலங்களைச் சேர்ந்த பேராளர்கள் பெனாம்பாங்,
அனைத்துலக தொழில்நுட்ப மற்றும் வர்த்தக மையத்திலும் கூச்சிங்
பென்வியூ மாநாட்டு மையத்திலும் நேரடியாக தங்கள் வாக்குகளைச்
செலுத்துவர்.
அதே சமயம், மாநாட்டிற்கான சாதாரண பேராளர்களும் கூடுதல்
பேராளர்களும் அந்த மூன்று பதவிகளுக்கும் ‘அடில்‘ செயலி வாயிலாக
இணையம் வழி வாக்களிப்பர்.
இந்த தேர்தலில் மொத்தம் 251 வேட்பாளர்கள் போட்டியில் பங்கு
கொண்டுள்ளனர். அவர்களில் 104 பேர் எம்.பி.பி. பதவிகளுக்கும் 85 பேர்
இளைஞர் பிரிவுக்கும் 62 பேர் மகளிர் பிரிவுக்கும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் கட்சியின் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்
பதவிக்கு பொருளாதார அமைச்சரும் நடப்பு துணைத் தலைவருமான
டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மற்றும் நுருள் இஸ்ஸா அன்வாருக்கும் இடையே
போட்டி நிலவுகிறது.
கட்சியின் நான்கு உதவித் தலைவர் பதவிகளுக்கு மொத்தம் 12 பேர் களம்
காண்கின்றனர். அவர்களில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது, அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப அமைச்சர் சாங் லீ காங், சிலாங்கூர் மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமினுடின் ஹருண் ஆகியோரும் அடங்குவர்.
கட்சியின் இளைஞர் மற்றும் ‘மகளிர் மாநாடுகள் இன்று காலை
அதிகாரப்பூர்வமாக தொடங்கிய வேளையில் தேசிய பேராளர் மாநாட்டை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு 9.25 மணிக்கு
அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுவார்.


