கோலாலம்பூர், மே 22 - ஆசியான் அமைப்பின் 46வது உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் தலைவர்கள் இடையிலான கலந்துரையாடலில் காஸா நிலவரம், உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய பொருளாதார நலன்கள் மற்றும் ஆசியான் நாடுகளிடையே முதலீட்டு முன்னெடுப்பு ஆகியவை முக்கிய இடத்தை பெறும்.
பிராந்திய எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஆசியான் எரிசக்தி மின்பாதைத் திட்டத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு ஆசியான் தலைவராக பொறுப்பேற்றுள்ள மலேசியா, ஆசியானை கொள்கை ரீதியான பிராந்திய சக்தியாக தெளிவான மற்றும் நிலையான பொருளாதார திசையுடன் தொடர்ந்து இயக்குவதில் உறுதியாக உள்ளது என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடனான பிரதமரின் விளக்கமளிப்பு நிகழ்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா விதித்த வரி குறித்து கருத்து தெரிவித்த அன்வார், உள்நாட்டு பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற பங்காளிகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவற்றில் மலேசியா கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
மலேசியா ஒரு திறந்த வர்த்தக நாடாக விளங்க உறுதிபூண்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பாரம்பரிய வர்த்தக பங்காளிகளுடன் உறவுகளைத் தொடர்கிறது. அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளை நிறுவுவது உட்பட புதிய சந்தைகளையும் ஆராய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரதமர், பழைய அறிமுகமானவர்கள் உட்பட ஊடகவியலாளர்களுடன் நேரத்தைச் செலவிட்டதோடு நடப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.


