கோலாலம்பூர், மே 22 - நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியிலிருந்து மொத்தம் 182,884.02 வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி அஸ்ருல் டாருஸ் முன்னிலையில் தமக்கெதிராக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை 37 வயதான சித்தி நூரைன் முகமது கசாலி மறுத்து விசாரணை கோரினார்.
எச்.டி.ஜே. ஆயில் எண்டர்பிரைஸ் கோலாலம்பூர் நிறுவனத்தின் நிதி விவகாரங்களை கவனிக்கும் அதிகாரி என்ற முறையில் பொருள் விநியோகிப்பாளர்ககளுக்கு செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் பெட்ரோன் ஜாலான் துன் ரசாக் பெட்ரோல் நிலையத்தில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் ப 408 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி அஸ்ருல் டாருஸ், வழக்கு விசாரணையை ஜூன் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் யாரும் ஆஜராகாத நிலையில், அரசு தரப்பு துணை வழக்கறிஞர் முகமது அமீர் ஹனிப் அஹிஸ்மான் வழக்கை நடத்தினார்.


