கோலாலம்பூர், மே 22 - ஆசிய நாடுகளில் கோவிட்-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பதற்கு JN.1 வகையை காரணம் ஆகும்.
இது ஒமிக்ரோன் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் துணைப் பிறழ்வுகளான LF.7, NB.1.8 போன்றவையும் வேகமாக பரவி வருகின்றன.
இம்மாதத் தொடக்கத்திலிருந்தே சிங்கப்பூர், தாய்லாந்து, ஹோங் கோங் போன்ற நாடுகளில் நோய்ச் சம்பவங்கள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. இந்த நடப்பு நிலவரம், இவ்வட்டாரத்திலுள்ள மற்ற நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், மலேசியாவில் கோவிட்-19 இன்னமும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. அந்நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கடந்த மே 20 வரை, நாட்டில் 11,000-க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவாகின. எனினும், அது சரிந்து வரும் போக்கையே காட்டுவதாக சுகாதார அமைச்சு விளக்கியது.
கடந்த 7 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் சராசரி எண்ணிக்கையும் 45 பேரிலிருந்து 37-க்குக் குறைந்திருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.


