கோலாலம்பூர், மே 22 - மலேசிய பட்டதாரிகள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு சம்பாதிக்கிறார்களே தவிர, சேமிப்போ அல்லது மேல்நோக்கி நகர்வதற்கோ அவர்களிடம் சிறிதும் மிச்சமில்லை என தொழிலாளர் சந்தை ஆராய்ச்சி குழுவான Future Studies Berhad-டின் புதிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
70 விழுக்காட்டு பட்டதாரிகள், பகுதி மற்றும் குறைந்த திறனை சார்ந்த வேலைகளில் தான் உள்ளனர்; அதிலும் இளங்கலைப் பட்டதாரிகள் 65 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர், மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.
இச்சம்பள அளவானது, தினசரி வாழ்க்கையை நகர்த்துவதற்கு மட்டுமே கட்டுப்படியாகிறது. ஆகவே, இதுதான் உண்மை நிலவரம் என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.
அதோடு, உயர் கல்வி எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை என்பதையும் நிரூபிக்கிறது. இது நீடித்தால், குறைந்த வருமானம் பெறும் மக்கள் மத்தியில் உயர் கல்வியைத் தொடரும் ஊக்கம் குறைந்து விடும் என அறிக்கைக் கூறியது.
எனவே, இப்பிரச்சனையைக் களைய கல்வி மற்றும் வேலை வாய்ப்புக் கொள்கைகளில் மிக பெரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது. தொழில்துறை பயிற்சியை மறுசீரமைத்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதும் அவற்றில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.


