கோலாலம்பூர், மே 22 - சுங்கை பூலோ, பெர்சியாரான் புக்கிட் ரஹ்மான் புத்ரா 1 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 16 வது மாடியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மூச்சுத் திணறலுக்குள்ளாகி சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 6.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 1,200 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த குடியிருப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம் எரிந்து நாசமானதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
இந்த தீவிபத்து தொடர்பில் அதிகாலை 6.36 மணிக்கு அவசர அழைப்பு வந்தததைத் தொடர்ந்து சுங்கை பூலோ தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு 10 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.
காலை 7.05 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீட்புக் குழுவினர் வருவதற்குள் 54 வயதுடைய ஆடவரும் அவரது 20 வயது மதிக்கத்தக்க இரண்டு மகன்களும் தப்பித்துவிட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சுத் திணறலுக்கு ஆளான அம்மூவரும் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பிடவும் தீயணைப்பு விசாரணை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


