கோலாலம்பூர், மே 22- மலேசியாவில் நடைபெறவிருக்கும் 46வது ஆசியான் உச்சநில மாநாட்டை முன்னிட்டு பல சாலைகள் படிப்படியாக மூடவிருப்பதால் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு வாகனமோட்டிளை பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) அறிவுறுத்துகிறது.
உச்சநிலை மாநாடு நடைபெறும் காலம் முழுவதும் அனைத்துலக பிரதிநிதிகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பிளஸ் நெடுஞ்சாலைகளில் உள்ள பல பகுதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று அது கூறியது.
இந்த சாலை மூடல் நடவடிக்கை மே 23 முதல் மே 26 வரை காலை 7.00 மணி முதல் மே 28 ஆம் தேதி காலை 8.00 மணி வரை அமலில் இருக்கும் என்று பிளஸ் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட சாலைகளில் கே.எல்.ஐ.ஏ. முதல் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு (இலிட்) வழியாக புத்ராஜெயா செல்லும் பகுதி, புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை வழியாக சுபாங் முதல் ஜாலான் டூத்தா வரை செல்லும் வழி, வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வழியாக சுங்கை பூலோ முதல் ஜாலான் டூத்தா வரை செல்லும் சாலை ஆகியவையும் அடங்கும்.
மாநாடு நடைபெறும் காலகட்டத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளை சீராக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிளஸ் எடுத்துள்ளது. மேலும், பிளஸ் நெடுஞ்சாலைகளில் மாநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை எளிதாக்க அதிகாரிகளுடன், குறிப்பாக போக்குவரத்து போலீசாருடன் அந்நிறுவனம் நெருக்கமாகச் செயல்படும்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) மற்றும் சுபாங் ஆகாயப்படை விமான தளத்திற்கு செல்லும் மற்றும் அல்லது அங்கிருந்து வெளியேறும் வாகனமோட்டிகள் தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், வாகனமோட்டிகள் போக்குவரத்துப் பணியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் நெரிசலைத் தடுக்க தேவையான இடங்களில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும் பிளஸ் வலியுறுத்தியது.


