ஜோகூர் பாரு, மே 22 - மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய வாகனமோட்டும் உரிமத்தின் புதிய வடிவமைப்பை சாலைப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
நேற்று முதல் இப்புதிய அட்டைகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனினும், இப்புதிய அட்டையின் அச்சிடல் வசதி வெளிநாடு செல்லும் மலேசியக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
வழக்கமான விண்ணப்பம் என்றால், அவர்களுக்கு டிஜிட்டல் உரிமமே கிடைக்கும். அச்சிட முடியாது என்றார் அவர். தற்போதைக்குக் குறிப்பிட்டசாலைப் போக்குவரத்துத் துறையின் கிளைகளில் இப்புதிய அட்டையை அச்சிட முடியும்.
இப்புதிய வடிவமைப்பானது, அட்டை மாற்றியமைக்கப்படுவது அல்லது போலியாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அது தவிர, அதிகபட்சம் 10 ஆண்டுகள் பயன்பாட்டுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியது என டத்தோ ஏடி கூறினார். பின்னணி படங்களாக இஸ்தானா நெகாரா, சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் ஆகியவை இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


